கணிதப் பாடத்திலும் 97 வலயங்களில் 42 வலயங்களில் சாதாரண சித்தி பெறாதவர்கள் 50 வீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். இவர்களும் உயர்தரக் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கின்றனர். வலய மட்டங்களைக் கவனிக்கும் பொழுது தமிழ் மாணவர்கள் பலர் கணிதப் பாடத்தில் சித்தியடையவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். கணிதப் பாடத்தில் சித்தி பெறமுடியாமையானது பலரது உயர்கல்விக்கான தடைகல்லாக இருக்கின்றது. பல்வேறு திறமைகள் கொண்ட மாணவர்கள் இந்த ஒரு பாடத்தினால் தமக்கான பல சந்தர்ப்பங்களை இழக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார் (39). ஆங்கிலப் பரிட்சையிலும் 25 மாவட்டங்களில் 19 மாவட்டங்களைச் சேர்ந்த 50 வீதமான மாணவர்கள் சித்தியடையவில்லை. குறிப்பாக 17 வலயங்களில் 75 வீதத்திற்கு அதிகமான மாணவர்கள் சித்தியடையவில்லை. இந்த வலயங்களில் வடக்கு கிழக்கு மற்று மலையகப் பிரதேசங்களின் பின் தங்கிய வலயங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. உதாரணமாக தீவகம், கிளிநொச்சி, மடு, வவுனியா, முல்லைத்தீவு, துணுக்காய், பட்டிருப்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, தென்மாராட்சி, மூதூர் என்பன சில. மேலும் உயர்தரம் கற்கின்ற மாணவர்களில் 60 -90 வீதமானவர்கள் ஆங்கிலப் பாடத்தில் சித்தியடையாதவர்கள் (70). ஆகவே கணிதம் ஆங்கிலம் ஆகிய பாடத்திட்டங்கள் மற்றும் அவை கற்பிக்கப்படும் முறைகள் தொடர்பாகவும் மாற்று செயற்பாடுகள் அவசியம் என்பதை மேற்குறிப்பிட்ட முடிவுகள் வலியுறுத்தி நிற்கின்றன. இவ்வாறு சில மாற்றங்களை ஏற்படுத்துவது பல மாணவர்களின் மேற்படிப்பை ஊக்குவிக்கும்.
க.பொ.த.உயர்தரப் பரிட்சையானது மேற்குறிப்பிட்ட இரண்டு பரிட்சைகளையும் விட அதிமுக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்றது. ஏனெனில் இது மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாகவும், பல்கலைக்கழக அனுமதிக்காகவும், பிற உயர் கல்வி நிறுவனங்களின் அனுமதிக்காகவும் மற்றும் தொழில் வாய்ப்பை பெறுதவற்கும் அவசியமானதாக இருக்கின்றது. இவ்வாறான பரிட்சையில் தோற்றியவர்களில் 6 வீதமான மாணவர்களும் சித்தியடைந்தவர்களில் 16 வீதத்தினர் மட்டுமே பல்கலைக்கழகம் நூழைவதற்கான அனுமதியைப் பெறுகின்றனர் (64). ஆகவே கடும் போட்டி நிலவும் பரிட்சையாக இது இருக்கின்றது. இதனால் பரிட்சைகள் மிகவும் கடுமையானவையாக இருக்கின்றன. இது பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கான தடைகற்களாக இருக்கின்றன. இப் பரிட்சையில் தோல்வியடைவது என்பது வாழ்கையிலையே தோல்வி அடைந்ததான உணர்வை மாணவர்களுக்கு வழங்குகின்றது. இப்பொழுது பல்கலைக்கழகங்களைத் தவிர இடைநிலைக் கல்லூரிகள் பல திறக்கப்படுகின்றமை புதிய வாய்புகளை திறந்து விட்டுள்ளன.. இருப்பினும் நமது பாடத்திட்டங்கள் அதைக் கற்பிக்கும் முறைகள் பரிட்சைகள் என்பவற்றில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த வேணை்டிய தேவை உள்ளது. அப்பொழுதுதான் சிறந்த மாணவர்களை மட்டுமல்ல பெரும்பான்மையான மாணவர்களை அறிவுத் தேர்ச்சி பெற்றவர்களாக உருவாக்கலாம். கணித விஞ்ஞானப் பாடங்களுக்கு சமனாக கலைத்துவப் பீடங்களுக்கான பாடங்களும் மதிப்புப் பெறவேண்டும். பெரும்பாலான அதிகாரிகள், நிர்வாகிகள், அரசியல்வாதிகள் அனைவரும் கலைத்துவ பாடங்களில் பட்டங்கள் பெற்றவர்களே. இவர்கள் சிறந்த நிர்வாகிகளாக இருந்தும் இப் பாடங்களுக்கான மதிப்பானது குறைவாகவே காணப்படுகின்றது (124). இதற்கான காரணங்களை அறிவது பயனுள்ளதாகும்.
பாடத்திட்டங்கள், பரிட்சைகள் என்பவற்றுக்கு அப்பால் பாடசாலை நடைபெறும் நேரங்கள் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் உளவியலைப் பாதிக்கின்ற இன்னுமொரு முக்கிய காரணியாக இருக்கின்றது. இது குறிப்பாக பெண் ஆசிரியர்களை அதிகமாகப் பாதிக்கின்றது. ஏனெனில் அவர்களே பெரும்பான்மையாக இருப்பது மட்டுமல்ல பெரும்பாலும் காலையில் எழும்பி சமையல் வேலைகளை செய்து, குழந்தைகளையும் தயார்படுத்தி, வேலைக்குச் செல்பவர்களாக இருக்கின்றார்கள். மாணவர்களைப் பொருத்தவரை அதிகாலையில் எழும்புவதும், பாடசாலைக்குத் தூர இடங்களிலிருந்து பயணிப்பதும், காலை உணவை உட்கொள்வதிலிருந்து விடுபடவைக்கின்றது. காலை உணவை உண்ணாது கற்பது என்பது களைப்பையும் மயக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியது. இந் நிலைமையானது கற்பதில் கவனத்தை ஈர்க்காது. இதேபோல் அதிகாலையில் காலைக் கடன்களை செய்ய முடியாதவர்கள், தண்ணீர் தட்டுப்பாடு உள்ளவர்கள் எல்லாம் இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே பாடசாலை நேரங்களில் (8.30 – 4.30) மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியமானது எனக் கருதப்படுகின்றது. இது பல வழிகளில் அனைவருக்கும் நன்மை தருவதாக இருக்கும் என்கின்றார். மேலும் கற்பிக்கும் நேரங்களையும் 40 நிமிடங்களிலிருந்து ஒரு மணித்தியாலத்திற்கும் சில பாடங்களை இரண்டு மணித்தியாலங்கள் கற்பிப்பதற்கு ஒதுக்குவது ஆரோக்கியமானது எனக் கருதப்படுகின்றது (100).
ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் முக்கியமாக கவனத்திற்கு உரியன. நமது நாட்டில் ஆசிரியர் நியமனங்கள் தொண்டர் ஆசிரியர்கள், பயிலுனர் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் எனப் பலதரப்பட்ட வகைப்பாடுகளிலும் தரங்களிலும் நடைபெறுகின்றன. இவர்களின் ஊதியங்கள் குறைவாக இருந்தபோதும் பல பிரச்சனைகளுக்கும் மத்தியில் அர்ப்பணிப்புடன் கற்பிக்கின்றவர்களும் உண்டு (86-90). அதேநேரம் துஸ்பிரயோகம் செய்பவர்களும் உண்டு. பெரும்பாலான ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடத்தில் மட்டுமே திறமையும் ஆற்றலுமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். இவர்களுக்கு ஆசிரியர்களின் உளவியல் தொடர்பாக மட்டுமல்ல மாணவர்களின் உளவியல் தொடர்பாகவும் விரிவான ஆழமான அறிவற்றவர்களாகவே இருக்கின்றார்கள். ஆகவேதான் மாணவர்களை ஆரோக்கியமாக வழிநடாத்துவதற்குப் பதிலாக அடிப்பதனுடாகவும் மற்றும் பல்வேறு தண்டனைகள் வழங்குவதனுடாகவும் வழிநடாத்துகின்றனர். இது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றன. ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளையும் தாழ்வுச் சிக்கல்களையும் எதிர்நோக்கும் ஆசிரியர்கள் இந்த முரண்பாடுகளை எல்லாம் எதிர்மறையாகவே கையாள்கின்றார்கள். இதன் விளைவாகப் பாதிக்கப்படுவது மாணவர்களும் அவர்களது கல்வியுமே. இதற்கு இன்னுமொரு காரணம் நமது நாடுகளில் ஆசிரியர் தொழிலுக்கு இருக்கின்ற குறைவான மதிப்பாகும்.
நமது நாடுகளில் ஆசிரியர் தொழில் என்பது முதல் தெரிவல்ல (150).
பெரும்பாலானவர்களுக்கு சகல தெரிவுகளும் மறுக்கப்பட்ட நிலையில் அல்லது அதற்கான சந்தர்ப்பங்களை இழந்த நிலையில் இறுதியான தெரிவாக இருப்பது ஆசிரியர் தொழிலாகும். உண்மையிலையே இது மறுதலையாக இருக்க வேண்டும். இவை ஒரு புறம் என்றால் மறுபுறம் இந்த ஆசிரியர்களுக்கு வேலைப்பளுவும் அதிகமாக இருக்கின்றன. பலவகையான நிர்வாக வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தவணைக்குள் பூர்த்தி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. புதிதாக காலையில் வருகைதரும் பொழுது குறிப்பிட்ட நேரத்திற்குள் இயந்திரத்தில் கைநாட்டு இட்டுப் பதிவு செய்வதும் ஆசிரியர்களுக்கு மனவூளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது. ஏற்கனவே ஊதியங்கள் நிலுவைகளில் இருக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகள் அவர்களின் ஊதியத்தை மேலும் வெட்டுகின்றன. இதைவிட இவர்களுக்கு வழங்கப்படுகின்ற குறைவான ஊதியமும் ஆர்வமுடன் கற்பிப்பதற்கான ஊக்குசக்தியாக இல்லை. இவ்வாறான செயற்பாடுகள் ஆசிரியர்கள் அதிகமான சுரண்டலுக்கு உட்படுகின்றார்கள் என்பதையே காண்பிக்கின்றது. மேலும் இவர்கள் தாம் கற்பிக்கும் பாடசாலைகளுக்கு நீண்ட தூரம் பயணித்து பின் கற்பிப்பது என்பது நடைமுறையில் இலகுவான விடயமல்ல. உண்மையிலையே 10 வருட சேவையைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் தமது ஊர்களில் அல்லது அதனருகில் நியமனம் பெறுவதே சிறந்தது. புதிய நியமன ஆசிரியர்கள் தூர இடங்களுக்குச் சென்றாலும் அவர்களுக்கு சகல வசதிகளுடனும் விடுதி வசதிகள் அளிக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் நல்ல மனநிலையில் பாடசாலைக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும். இப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு திடமான கல்விக் கொள்கைகள் அமுல்படுத்தப்பட வேண்டும். இவை குறிப்பிட்ட காலத்திற்காகவது மாற்றப்படாது தொடரப்பட வேண்டும் (90).
மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு தென்கொரியாவின் கல்வித் திட்டத்தை உதாரணமாக முன்வைக்கின்றார். இருபது வருடங்களுக்கு முன்னர் கல்வியிலும் பொருளாதார ரீதியிலும் பின்தங்கியிருந்தவர்கள் இன்று எவ்வாறு முன்னேறியிருக்கின்றார்கள் என்பது கவனத்துக்குரியது. கற்பிக்கும் முறைகள், கற்கும் முறைகள், பரிட்சைகள், இவற்றுக்கான நேரங்கள் மற்றும் உடல் சார்ந்த விளையாட்டுகள் என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவதனுடாக ஆரோக்கியமான முன்னேற்றகரமாக விளைவுகளை கண்டடையலாம் என்கின்றார். மேலும் அந்த நாட்டில் ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கே அதியுயர் சித்தியடைய வேண்டி உள்ளது. அதாவது மிகத் திறமையானவர்கள் மட்டுமே ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தனியான பல்கலைக்கழகமும் இருக்கின்றது. சில நாடுகளில் முதல் பட்டம் உள்ளவர்கள் மட்டுமே ஆசிரியர் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இந்த நாடுகளில் ஆசிரியர்களுக்கு அதிக ஊதியமும் வழங்கப்படுவதுடன் சமூக அந்தஸ்து பெற்ற தொழிலாகவும் இருக்கின்றது (152). புதிய தலைமுறையினரை உருவாக்கும் ஆசிரியர் சமூகத்திற்கு இது அவசியமானதே. ஆனால் நமது நாட்டில் இவை எல்லாம் தலைகீழாகவே நடைபெறுகின்றன. ஆகவே இதை மீண்டும் தலைகீழாக்கி நிமிர்த்த வேண்டிய பொறுப்பு நம்புடையதே.
அண்மையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திலுள்ள பின்தங்கிய சில பாடசாலைகளுக்குப் பயணம் செய்து மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர்களுடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகப் பெரிய பாடசாலைகளில் மாணவர்களை வடிகட்டி எடுத்து ஒரு தொழிற்சாலையைப் போல மாணவர்களைப் பரிட்சையில் சித்தியடையச் செய்து உற்பத்தி செய்து அனுப்புகின்றார்கள். பெரும்பான்மையான மாணவர்கள் எந்தவித சமூக சிந்தனையுமின்றி இலவகச் கல்வியைக் கற்று தமது சொந்த வாழ்க்கையையும் குடும்பத்தையும் மட்டுமே கவனிப்பவர்களாக மாறிவிடுகின்றனர். ஆனால் நான் பயணித்த ஒரு சில பாடசாலைகளில் மட்டுமே இவை மாணவர்களுக்கு உணர்த்தப்பட்டு கல்வி கற்றபின் அவர்களின் பங்களிப்பு எந்தளவிற்கு அவசியம் என்பதைப் புரியவைப்பதுடன் பங்களிப்பையும் பெறுகின்றனர். மேலும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் இணைந்து கல்வியைப் பெற கூட்டு முயற்சியாக செயற்படுகின்றார்கள். இந்த முன்னுதாரணம் நமது நாட்டில் பல இடங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்றாகும்.
இறுதியாக ஒரு முன்மொழிவு. இலங்கையில் கல்வி கற்று முன்னேறிய ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. நாம் பொறியிலாளராகவோ வைத்தியராகவே வழக்கறிஞ்சராகவோ கணக்காளராகவோ உருவாகியிருக்கின்றோம் என்றால் அதற்கு முதன்மையான காரணம் நாம் பெற்ற இலவசக் கல்வியாகும். உலகத்தில் மிக அரிதான நாடுகளில் மட்டுமே பல்கலைக்கழம் வரை இலவசக் கல்வி நடைமுறையில் உண்டு. அதுவும் நமது நாட்டில் கற்பதற்கு ஊக்கத் தொகையும் தருகின்றார்கள். இலவசக் கல்வியை நாம் பாதுகாக்க வேண்டுமாயின் சில பங்களிப்புகளையும் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே உயர் தர பரிட்சை மற்றும் பல்கலைக்கழகம் முடித்தவர்கள் pay it forward என்ற அடிப்படையில் வார இறுதிகளிலோ, ஒரு வாரமோ, மூன்று மாதங்களோ அல்லது ஒரு வருடமோ தொண்டர் ஆசிரியர்களாகப் பின்தங்கிய கல்வி வலயங்களுக்குச் சென்று கற்பிக்க வேண்டும் என்பது நிபந்தனையாக இருக்க வேண்டும். இதற்கான ஒரு திட்டத்தை அனைவரும் இணைந்து வரைந்து செயற்படுத்த வேண்டும். மேலும் ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்பவர்ளுடன் இணைந்து செயற்படுவதற்கான திட்டங்களையும் வரைய வேண்டும். இப்பொழுது ஆரம்பிப்போமானால் எதிர்வரும் க.பொ.த (சா.த) பரிட்சையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம். சிந்திப்போமாக….
இதன் ஆரம்ப கட்டமாக முதலில் ஒரு இணையத் தளத்தை உருவாக்குவோம். அதில் முதலாவதாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திலுள்ள பாடசாலைகளை மாவட்டங்கள் கல்வி வலையங்கள் என்றடிப்படையில் பிரிப்போம். இரண்டாவதாக இவற்றில் எந்தப் பாடசாலைகளுக்கு எந்தப் பாடத்திற்கு ஆசிரியர்கள் தேவை என்பதை அப் பாடசாலையின் அதிபரே குறிப்பிடுவதற்கு அமைய வடிவமைப்போம். மூன்றாவதாக இப் பாடசாலைகளில் தொண்டராகப் பணியாற்ற விரும்புகின்றவர்கள் தாமாகவே பதிவு செய்வதற்கு ஏற்ப வடிவமைப்போம். இதில் அவரது கல்வித்தரம் எந்தப் பாடசாலையில் எவ்வளவு காலங்கள் கற்பிக்க விரும்புகின்றார்கள் என்ற தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு இலவசமாக கற்பிக்க முன்வருபவர்களுக்கு குறிப்பிட்ட பாடசாலை அல்லது கல்வி வலைய அதிகாரிகள் தங்குமிடம் உணவு என்பவற்றைப் பொறுப்பெடுக்க வேண்டும். இதில் மாணவர்களின் பெற்றோர்களையும் பங்காளிகலாக இணைக்கலாம். இவ்வாறன ஒரு இணையத்தளத்தை இலவசமாக உருவாக்க முன்வருபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.
மீராபாரதி