சென்று வாருங்கள் ஆசானே!

நேற்று முன்தினம் எனது ஆசிரியர் சரவணமுத்து விநாயகரத்தினம் தெல்லிப்பழை, பன்னாலையிலுள்ள அவரது ‘புதுவீட்டில்’ காலமானார்.

மகாஜனாவின் பழைய மாணவரான ஆசிரியர், 70களின் ஆரம்பத்தில் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியராக தனது பணியை தொடங்கினார். பிந்நாளில் இருந்தது போல் அல்லாமல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட ஒருவராகவே அவர் பற்றிய ஆரம்ப நினைவுகள் உள்ளன. உதைபந்தாட்ட, மெய்வல்லுனர் போட்டிகளில் அவருக்கு விருப்பம் அதிகம். மூன்றாம் பிரிவு ( அப்போது அதுவே ஆகக் குறைந்த வயதுப் பிரிவு/ 15 வயதுக்கு உட்பட்ட அணி) அணியின் பொறுப்பாசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றினார்.

இதே காலப் பகுதியில் ‘ அம்பனை கலைப்பெரு மன்ற’த்தின் தலைவராகவும் கடமையாற்றினார். இதன் காரணமாக எனது வீட்டுக்கு வந்துபோகும் ஒருவராகவும் இருந்தார். இக்காலத்தில் அமரர் இரத்தினசிங்கம் ஆசிரியரே சமய நிகழ்வுகளை நடத்தி வந்தார். ஆசிரியர் அவருக்கு உதவி வந்தார். கடவுள் நம்பிக்கை மிகுந்திருந்த அப் பால்யத்தில் அவருடன் எனக்கு பெரிய அளவில் உறவுகள் இருக்கவில்லை.

இடைநிலை வகுப்புகளில் எனக்கு தமிழாசிரியராக அவர் வந்தபோதே அவருடன் நெருக்கமேற்பட்டது. அது அதிபர் கனகசபாபதி தலைமையில் புத்தெழுச்சி பெற்ற காலம்.1977ம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பில்’தமிழின்பம்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை ஆரம்பிக்க ஊக்கப்படுத்தினார். அவர்தான் அந்த பெயரையும் தெரிவுசெய்தார். சக வகுப்புத் தோழர்கள் என்னை ஆசிரியராக தெரிந்தார்கள்.

இதுவே அவருடனான நெருக்கமான உறவு கொண்டிருந்த காலம். என்னுடைய இலக்கியப் பயணத்தின் முதற் காலடியை ஆசிரியரே தொடக்கி வைத்தார்.

பின்னர், மத நம்பிக்கைகளில் இருந்து விடுபட்டு ஒருவகை ரிபெலாக மாறிய காலத்தில் நெருக்கம் குறைந்தாலும் அவர் உருவாக்கிய ‘சிவநெறிக் கழக’த்தில் என்னுடைய நண்பர்கள் ஹரிகரனும் கணேசலிங்கமும் செயற்பட்டு வந்ததனால் என்மீதான வாஞ்ஞையில் பெரும்பாதிப்பு ஏற்பட்டதில்லை. நாங்கள் ‘ புதுசு’ சஞ்சிகையை தொடங்கியபோது மகிழ்ந்தார்.

தமிழ், சைவ சமயப் போட்டிகளுக்கு அதிகளவில் மாணவர்களை தயார் செய்து அனுப்பினார். ஆண்டு தோறும் இவற்றில் எமது பாடசாலை மாணவர்கள் அதி கூடியளவில் வெற்றிபெற அயராது உழைத்தார்.

அக்கறை மிக்க ஆசிரியரொருவர் மாணவர்களுக்காக செலவிடும் நேரத்திலும் பல மடங்கு நேரத்தை அவர்களுக்காக செலவிட்ட ஆசான்.

சென்று வாருங்கள் ஆசானே!

(  புகைப்படம் 1974 ஏப்பிரல் மாதம் திருக்கேதீஸ்வரத்தில் எமது பாடசாலைத் திருவிழாவில் எடுக்கப்பட்டது.
இருப்பவர்கள்: திரு இராமநாதன், அமரர் விநாயகரத்தினம், அமரர் இரத்தினசிங்கம்.
நிற்பவர்கள்: திரு அருள்மணிநாதன், திரு கிருஷணமூர்த்தி, அமரர் சரவணபவன், திரு குணரத்தினம், திரு செல்வரத்தினம், அமரர் சங்கரப்பிள்ளை.
புகைப்பட உதவி: பேராசிரியர் பொ இரகுபதி.

Comments are closed.