நீங்கா நினைவுகள்!

1971ம் ஆண்டு. நான் மகாஜனாவில் அப்போதுதான் சேர்ந்தேன். கல்லூரிவிட்டதும் சரியாக மாலை 3.45 மணிக்கு மைதானத்தில் அரைகாற்சட்டையுடனும் கையில் பந்துடனும் ஒரு உருவத்தைக்கண்டேன். நிச்சயமாக அது மாணவனாக இருக்கமுடியாது. மாணவர் யாரும் பயற்சிக்கு வந்திருக்கவில்லை.தானே பந்தை உருட்டி உருட்டி ஓடிக்கொடிருந்தது அந்த உருவம். அந்த உருவம் வேறு யாருமல்ல. பிற்காலத்தில் எம்மால் “விம்” எனஅன்பாக அழைக்கப்பட்ட விநாயகரத்தினம் மாஸ்ரரே!

அவரே மூன்றாம் பிரிவின் பயிற்சியாளர். மகாஜனா உதைபந்தாட்டத்தில் கொடிகட்டிப்பறக்க வீரர்களை ஆரம்பத்திலேயே வித்திட்ட பெருமை எங்கள் விநாயகரத்தினம் மாஸ்ரரையே சாரும்.

அந்தக்காலத்தில் இல்ல மெய்வல்லுனர் போட்டிகளின் போது எங்கள் விநாயகரத்தினம் மாஸ்ரரின் கையில் துப்பாக்கி இருந்தது. அது எங்களை வெருட்டிக்கொண்டுமிருந்தது. “வைற் அன் வைற்”றுடன் 100 மீற்றர் 200 மீற்றர் ஓட்டத் தொடக்கிவிப்பாளராக கடமையாற்றிய கம்பீரத்தோற்றம் இப்போதும் என் கண்முன்னே நிற்கிறது.

பின்னாளில் இவர் எங்கள் சமய ஆசிரியர். சைவ பரிபாலனசபை விவேகானந்தசபை பரீட்சகளுக்ககெல்லாம் எங்களை தயார்படுத்தி வெற்றி பெறச்செய்தார். மாவிட்புரம் திருக்கேதீஸ்வரத் திருவிழாக்காலங்களின் போது அவரோடு பயணித்த காலங்கள் என்றும் இனிமையானவை. சிக்கனத்தை எங்களுக்கு கற்றுத் தந்தவர் அவரே! மாணவர்களிடம் எப்படிக் கச்சிதமாக வேலை வாங்கவேண்டும் என்ற வித்தயையும் அவர் கற்று வைத்திருந்தார்.

அவர் பாடசோலையோடு மிக அன்னியோன்யமாய் இருந்தார். பாடசாலைக்கு அருகில் அவர் வீடு இருந்ததும் ஒரு காரணம். பாடசாலையிலேயே அவர் நேரங்கள் அதிகமாய் கழிந்தன. கிட்டத்தட்ட 40 ஆண்டுகால மகாஜனா மாணவர் பெயர்விபரங்களையெல்லாம் நினைவில் வைத்திருந்தார். இப்போது போனாலும் பெயர் சொல்லி அழைக்கும் அவர் நினைவாற்றலும் அன்பும் வியப்பிற்குரியது.

அவரின் சிக்கனத்திற் ஒரு உதாரணம்.

“டே சுதர்சன் இஞ்ச வா”

“என்ன சேர்”

உந்தாள் ஏதோ வேலை வேண்டப்போகுது என்று மனசுக்குள கருவியவாறே கிட்டப்போனேன்.

கையில் ஒரு என்வலப்பை எடுத்து நீட்டியவாறே “இஞ்ச உந்த சைக்கிள கொண்ட தெல்லிப்பழை MPCSக்கு முன்னால விட்டுட்டு நீ பஸ் எடுத்து மனோகரா தியேட்டரடீல இறங்கினியெண்டா பக்கத்தில நாவலர் பிறெஸ் இருக்கு. அங்க இதக் குடுத்தியெண்டா அவை ஒரு என்வலப் தருவினம். அத நீ வேண்டிக்கொண்டு பக்கத்தில் தேத்தண்ணிக்கடை இருக்கு. அதில ஒரு பிளேன்ரியும் வடையும் சாப்பிடிடுட்டு. அப்பிடியே நடந்து போனியெண்டா யாழ்ப்பாணம் பஸ்ராண்ட் வரும். அதுக்கு கிட்டவும் ஒரு அலுவல் வைத்திருப்பார். அதையும் முடிச்சுக்கொண்டு பஸ் எடுத்தியெண்டா அப்பிடியே வீட்ட வரலாம்”. இதற்றாக எங்கட கைக்குள் 2 ரூபாவை மட்டும் வைப்பார். இவ்வளவு அலுவல்களும் அந்த 2 ரூபாவுககுள் அடங்கிப்போவது ஆச்சரியம்தான்.

“உனை நீ அறிவாய்” என்பது எமது பாடசாலையின் விருது வாக்கு. எங்கள் விநாயகரத்தினம் மாஸ்ரரின் கடிதத்தலைப்பில் காணப்படும் வாசகம் “என் கடன் பணி செய்து கிடப்பதே”. தன் கடன் பணிசெய்து இன்று ஓய்ந்துவிட்ட எங்கள் விநாயகரத்தினம் மாஸ்ரருக்கு எங்கள் பாரிஸ் நண்பர்கள் சார்பில் அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றேன்.

– ச. சுதர்சன்.

 

 

Comments are closed.