பிரம்பியம்

“ஆசிரியர் மாணவர்களுக்கிடையிலான உறவு என்பது பழைய வடிவத்தில் அதாவது குரு- சீடர் என்ற வடிவத்தின் தொடர்ச்சியாக இனி நவீன உலகில் இருக்கவே முடியாது.”

“மேற்குலகின் கல்விமுறைமைகளை விமர்சனமின்றி ஏற்கவேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவரவில்லை. ஆனால் அதிலிருந்து பெற்றுக்கொள்ள எமக்கு நிறையவே இருக்கிறது என்பதை மட்டும் சொல்லத் தயக்கமில்லை.”

“மேற்குலகில் எமது பிள்ளைகளை நாம் புரிந்துகொள்வதை விடவும் ஆசிரியர்கள் ஆசிரியைகளே நுணுக்கமாக அவர்களை புரிந்து வைக்கிறார்கள். எமது பிள்ளைகளின் குணாம்சம் குறித்து துல்லியமாக எமக்கு சொல்வதைக் கேட்டு ஆச்சரியமடைந்திருக்கிறேன். இதன் அடிப்படையில் பெற்றோராகிய எமக்கு ஆலோசனை வழங்குகிறார்கள்.

உலகில் உயர்ந்த கல்விமுறையை பேணுகிற பின்லாந்தில் ஆசிரியராக வருவது என்பது – எங்கடை தமிழிலை சொன்னால்- ஒரு டாக்டராக வருவதை விடவும் பொறியியலாளராக வருவதை விடவும் கடினமானது என்று வாசித்திருக்கிறேன். இதுவே போதும் ஆசிரிய தொழில் எவளவு மகத்தானது என்பதை புரிந்துகொள்ள. அந்த மகத்துவம் மாணவர்களின் பெறுபேறுகளை வைத்து மதிப்பிடப்படுவதில்லை. அவ்வாறான ஆசிரியன்கள்/ஆசிரியைகள் நமது மண்ணிலும் இருக்கலாம். ஆனால் பொதுப்போக்காக அது உருவாக வேண்டும். அதன்மூலம் சிறந்த மனிதர்களை, சமூகப் புத்திஜீவிகளை உருவாக்கும் களமாக பாடசாலைகள் இயங்க முடியும்”.


 

பிரம்பு மாணவர்களுக்கு எப்போதுமே வன்முறையின் பிம்பம்தான்.பாடசாலைகளில் மாணவர்களைத் தண்டிப்பது அல்லது பிரம்பால் அடிப்பது என்ற நடைமுறை உலகம் பூராவும் இருந்திருக்கிறது. இப்போதும் சில நாடுகளில் இருக்கலாம். பல நாடுகளும் எப்போதோ கைவிட்டுவிட்ட இந்த அணுகுமுறை இலங்கையிலும் இப்போ கைவிடப்பட்டிருக்கிறது அல்லது தடைசெய்யப்பட்டிருக்கிறது.

முன்னர் பெரிய கல்லூரிகளில் உயர்வகுப்பு மாணவர்கள்கூட இதற்கு முகம்கொடுக்க நேர்ந்திருக்கிறது. நான் படித்த பிரபல கல்லூரியின் அலுவலக வாசலில் ஒரு கூடைக்குள் பிரம்புகள் நிமிர்ந்தபடி கொழுக்கித் தலையுடன் இருக்கும். வகுப்பெடுக்க செல்கிற ஆசிரியர்கள் ஆசிரியைகள் அப்படியே கைவாக்காக ஒரு பிரம்பை தம்முடன் கொழுவிச் செல்வர்.

உயர்தர மாணவனாக இருக்கும்போதும் அடிவாங்கியிருக்கிறேன். வெள்ளைச் சேட்டின் முதுகுப் பகுதியில் பச்சை பூவரசம் கம்பினாலும் அடிவாங்கியிருக்கிறேன். ஆரம்பப் பாடசாலையில் எட்டு வயதாயிருக்கும்போது உச்சந்தலையில் துவரம் கம்பால் அடிவாங்கி மயக்கமுற்றும் விழுந்திருக்கிறேன். வலிக்கிறது இப்போதும் இந்த அணுகுமுறையை நினைத்தால். அவ்வப்போது வருகிற தீராத தலைவலியால் (சுமார் 15 மணித்தியாலங்கள் வரை உச்சந்தலை இடி உட்பட) நான் அன்றைய பொழுதை இழந்துபோய்விடுவேன். எனது சீன மருத்துவர் இதற்கான காரணமாக நான் சின்னவயதில் உச்சந்தலையில் அடிவாங்கியதால் ஏற்பட்ட நரம்பியல் தாக்கம் காரணமாக இருக்கலாம் என சந்தேகப்படுகிறார். இவ்வாறாக எத்தனையோபேர் உடல்ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

இது ஒரு வன்முறை என்பதை எமது கல்விநிறுவனங்கள் புரிந்துகொள்ள இவளவு காலம் பிடித்திருக்கிறது. ஒருசில வருடங்களுக்குமுன் சில ஆசிரிய நண்பர்களுடன் இதுகுறித்த உரையாடலில் ஈடுபட்டபோது அவர்கள் அடிப்பதை ஆதரித்தே கதைத்தார்கள். தவறிழைக்கும் மாணவர்களை கையாள்வதில் அவர்களுக்கு வேறு அணுகுமுறைகள் பற்றிய சிந்தனையே இருப்பதாய்த் தெரியவில்லை.

எந்த ஒடுக்குமுறைகளும் வன்முறைகளும் தனக்கான கருத்தியலைக் கொண்டவை. இல்லையேல் அது சுலபமாக நிராகரிக்கப்பட்டுவிடும். அதிகாரம் செலுத்தலும் பணிந்துபோதலும் என்ற கருத்தியலே உள்ளார்ந்து இதற்குள் இருக்கிறது. தவறிழைத்தவரை தண்டிப்பதற்கான உரிமை அல்லது கடமை தனக்கு இருப்பதாக தண்டிப்பவர் நினைப்பார். தான் தவறிழைத்தால் தண்டிக்கப்படுவது இயல்பானது அல்லது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது என தண்டிக்கப்பட்டவர் நினைப்பார். நீதிமன்றம் போன்ற சட்ட ரீதியிலான நிறுவனங்களின் ஒழுங்குக்குள் இதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் பாடசாலையில் இதை எப்படிப் புரிந்து கொள்வது? ஏற்றுக்கொள்வது? இங்கு தவறு என்பதற்கான அளவுகோல்களே வேறுபட்டதாகவும் பிரச்சினைப்பாடாகவும் இருக்கும்.

இங்கு உளவியல் தாக்கமே அதிகமாக நிகழ்கிறது. வன்முறையின் மேற்கூறிய கருத்தியலை பிஞ்சு உள்ளங்கள் வரித்துக்கொள்ளத் தொடங்குகிறது. இது அவனது/அவளது எதிர்கால பருவங்களினூடு வளர்ச்சிபெறுகிறது. தண்டனை வழங்குவது, அடிப்பது என்பதெல்லாம் ஒரு வன்முறை மனோபாவத்தை ஊட்டிவிடுகிறது. அது குழந்தையின் குணாம்சத்தில் வன்முறையை ஒரு தீர்வாக அல்லது அணுகுமுறையாக செயற்படுத்துகிற அல்லது அங்கீகரிக்கிற மோசமான மனோபாவத்தை மெல்ல ஏற்றிவிடுகிறது. எதையுமே பரீட்சித்துப் பார்க்கவும் மீறிப் பார்க்கவும் இளமைப் பருவம் தூண்டியபடி இருக்கும். அதற்குள்தான் ஒரு பிள்ளையின் ஆளுமையும், படைப்பாக்கத்திறனும்கூட குடிகொண்டு இருக்கும். தண்டனை என்ற பெயரில் அதை வன்முறை கொண்டு அடக்குகிற செயலை ஆசிரியர்கள் தம்மையறியாமலே செய்ய நேர்கிறது.. இது ஓர் அவலம்.

ஆசிரியர் மாணவர்களுக்கிடையிலான உறவு என்பது பழைய வடிவத்தில் அதாவது குரு- சீடர் என்ற வடிவத்தின் தொடர்ச்சியாக இனி நவீன உலகில் இருக்கவே முடியாது. அது நட்பு ரீதியிலானதாக எதையும் உரையாடத் தயாராக இருக்கிற நெருங்கிய உறவை
ஆசிரியர் – மாணவர் இடையில் உண்டாக்குகிறதாக அமையவேண்டும். அல்லாவிடில் பிரச்சினைகளை தீர்க்க (அடக்க) மீண்டும் வன்முறையை தேடி போக வேண்டியிருக்கும்.

இங்கே “கல்வி” என்பதையும் “அறிவு” என்பதையும் வேறுபடுத்திப் பார்க்கிற பார்வை வேண்டும். அறிவை எட்டுவதற்கு கல்வி ஓர் ஏணிபோல் உதவலாம். ஆனால் கல்வியே அறிவாகாது. அறிவுதான் நான் மேற்கூறிய உறவுமுறையை ஆசிரியர் மாணவருக்கிடையில் நட்பாக பேண உதவும். குழந்தைகள் பற்றிய உளவியல் தத்துவங்களை ஆசிரியர்கள் படித்தே ஆகவேண்டும். நமது உடல் பாகங்கள் செயற்பாடுகள் குறித்த கல்வி மட்டுமல்ல அதன் சமூக இயங்குதன்மை (உடலரசியல்) அதன் மொழி (உடல்மொழி) பற்றிய அறிவும் தேவை. நம்மைச் சுற்றியிருக்கிற இயற்கை (தாவரங்கள் உயிரினங்கள்) பற்றிய அறிவு தேவை.

எமது உடலும் இயற்கையும் எம்மிடமிருந்து அந்நியப்பட்டுவிடாதபடியான அறிவு இதன்மூலம் எமக்கு வந்துசேரும். மனிதஜீவி இயற்கை உயிரி என்பதால் அதை ஆதாரமாகக்கொண்ட அறிவு மனிதஜீவிக்கு வேண்டும். அதுதான் அவனது/அவளது வெளி. இதை தவிர்த்துவிட்டு உதிரி நிலையில் வைத்து தனிமனிதர்களுக்கு புத்திபுகட்டுவதால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது.

உரையாடல் முக்கியமானது. ஆசிரியர் கருத்து வழங்குபவராகவும் மாணவர் கருத்தைப் பெறுபவராகவும் இருக்கிற ஒருவழிப் பாதை அதிகார மனோபாவத்தையே ஏற்படுத்தும். அது நட்பு ரீதியில் உரையாட அனுமதிக்காது. திறந்த மனத்துடன் பேச அனுமதிக்காது. பிச்சினையை கண்டுகொள்ள அனுமதிக்காது. எனும்போது எப்படி தீர்வை நோக்கிச் செல்வது?

எனவே ஆசிரியர்கள் பாடசாலைக்கு வெளியேயும் அறிவை தேடிக்கொள்ள வேண்டும். நூல்களை வாசிக்க வேண்டும். இதன்மூலம் தனதாக்கிக்கொள்கிற அறிவை மாணவ சந்ததிக்கு கடத்த வேண்டும். வெறுமனே புள்ளிகளை உற்பத்திசெய்கிற இயந்திரங்களாக மாணவர்களை ஆக்குதல் சமூகத்துக்கு உதவாது.

காட்லிக் கல்லூரியில் பிரபல அதிபராக இருந்தவர் இரத்தினசபாபதி அவர்கள். பதவி ஓய்வுபெற்றிருந்த காலத்தில் அவரிடம் நான் ரியூசனுக்குப் போயிருக்கிறேன். அவர் தன் கொடுப்புக்குள் சிரித்தபடி சொல்வார்… அடிக்கடி சொல்வார்…” படிப்பு ஒரு இரும்புக் குதிரை. அதிலை ஏறி ஓடுறதுபோலை பாசாங்குதான் செய்யலாம். அது ஓடாது” என்பார். இதே கல்விமுறையைப் பேண அவர் கண்டிப்பானவராகவும் functuality உள்ளவராகவும் dicipline கடைப்பிடிப்பவராகவும் அவர்மீது ஏற்றப்பட்ட பிம்பத்தை அவர் அந்தக் கல்லூரிக்காகவே காவினார் என்பதை எனக்கு அவரது இந்தக் கூற்று நினைவுபடுத்தும். ஆக கல்லூரியின் பெயரைக் காப்பாற்ற பிள்ளைகளை தகவமைப்பது அல்லது தயார்செய்வது போலல்லவா இருக்கிறது. இது பெயர்பெற்ற நிர்வாகப் புத்திஜீவிகளை உருவாக்கலாம்.. ஆனால் சமூகப் புத்திஜீவிகளை உருவாக்காது.

மேற்குலகின் கல்விமுறைமைகளை விமர்சனமின்றி ஏற்கவேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவரவில்லை. ஆனால் அதிலிருந்து பெற்றுக்கொள்ள எமக்கு நிறையவே இருக்கிறது என்பதை மட்டும் சொல்லத் தயக்கமில்லை. ஆரம்பப் பாடசாலையிலேயே தமது சூழலில் உள்ள புழு பூச்சி உட்பட உயிரினங்கள் மற்றும் செடி கொடி தாவரங்கள் பற்றிய தகவல்களை அதுகுறித்த அறிவை ஊட்டுகிறார்கள். அது தன் சூழலை முற்றாக புரிந்துகொள்கிறது. ( நம்மில் எத்தனை பேருக்கு ஒரு வாழைமரம் தென்னைமரம் பனைமரம் உயிர்வாழும் என்றாவது தெரியும்.) உடற் பாகங்கள் பற்றி சொல்லிக்கொடுக்கிறார்கள். தனது உடலை அது புரிந்துகொள்கிறது. நேசிக்கிறது. அவர்களது உடலில் மர்மஸ்தானங்கள் கிடையாது. பாலியல் உறுப்புகள்தான் இருக்கிறது. . பாலியல் கல்வியை சொல்லிக்கொடுக்கிறார்கள். தனது உடலை அது மர்மமாக உணர்வதில்லை. அதாவது தனது உடலிடமிருந்து தான் அந்நியப்பட்டு இருப்பதில்லை.

மேற்குலகில் எமது பிள்ளைகளை நாம் புரிந்துகொள்வதை விடவும் ஆசிரியர்கள் ஆசிரியைகளே நுணுக்கமாக அவர்களை புரிந்து வைக்கிறார்கள். எமது பிள்ளைகளின் குணாம்சம் குறித்து துல்லியமாக எமக்கு சொல்வதைக் கேட்டு ஆச்சரியமடைந்திருக்கிறேன். இதன் அடிப்படையில் பெற்றோராகிய எமக்கு ஆலோசனை வழங்குகிறார்கள்.

உலகில் உயர்ந்த கல்விமுறையை பேணுகிற பின்லாந்தில் ஆசிரியராக வருவது என்பது – எங்கடை தமிழிலை சொன்னால்- ஒரு டாக்டராக வருவதை விடவும் பொறியியலாளராக வருவதை விடவும் கடினமானது என்று வாசித்திருக்கிறேன். இதுவே போதும் ஆசிரிய தொழில் எவளவு மகத்தானது என்பதை புரிந்துகொள்ள. அந்த மகத்துவம் மாணவர்களின் பெறுபேறுகளை வைத்து மதிப்பிடப்படுவதில்லை. அவ்வாறான ஆசிரியன்கள்/ஆசிரியைகள் நமது மண்ணிலும் இருக்கலாம். ஆனால் பொதுப்போக்காக அது உருவாக வேண்டும். அதன்மூலம் சிறந்த மனிதர்களை, சமூகப் புத்திஜீவிகளை உருவாக்கும் களமாக பாடசாலைகள் இயங்க முடியும்.

Ravindran Pa

Comments are closed.