மகாஜன உதைபந்து அணிகள் நான்கும் மகாணப் போட்டிக்கு தகுதி பெற்றன.

 
கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்படும் உதைபந்தாட்டப் பிரிவுகள் நான்கிலும் வலய மட்டத்தில் வெற்றி பெற்ற யா/மகாஜனக் கல்லூரி அணிகள் வடமாகாண மட்டப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதிபெற்ற சிறப்பை அடைந்துள்ளன.
20 வயது ஆண்கள் அணி,18 வயது ஆண்கள் அணி,16 வயது ஆண்கள் அணி,20 வயதுப் பெண்கள் அணி(20 வயதிற்கும் 14 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் விளையாடலாம்) ஆகியவையே மாகாண மட்டப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.
வலிகாமம் கல்வி வலய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் 16 வயது ஆண்கள் அணி மூன்றாமிடம் 18 வயது ஆண்கள் அணி இரண்டாமிடம் 20 வயது ஆண்கள் அணி இரண்டாமிடம் 20 வயதுப் பெண்கள் அணி முதலாமிடம் பெற்றுள்ளன.
16 வயது ஆண்கள் அணி முதலாவது போட்டியில் அராலி இந்துக் கல்லூரியை 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதியாட்டத்தில் ஸ்கந்தவரோதயக் கல்லூரியை சந்தித்து 2:1 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதியாட்டத்திற்குள் நுழைந்தது. அரையிறுதியாட்டத்தில் சென் ஹென்றியரசர் கல்லூரியிடம் 3:0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து மூன்றாமிடத்திற்கான போட்டியில் யூனியன் கல்லூரியை எதிர்கொண்டது. மூன்றாமிடத்திற்கான போட்டியில் யூனியன் கல்லூரி விளையாடாமல் மகாஜனக் கல்லூரிக்கு வெற்றியை கொடுத்தது.
18 வயது ஆண்கள் அணி காலிறுதியாட்டத்தில் ஏழாலை ஶ்ரீமுருகன் வித்தியாலயத்தை 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. தொடர்ந்து அரையிறுதியாட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரியை 2:0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதியாட்டத்திற்குள் நுழைந்தது. இறுதியாட்டத்தில் சென் ஹென்றியரசர் கல்லூரியிடம் 2:1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து இரண்டாமிடத்தைப் பெற்றது.
20 வயது ஆண்கள் அணி குழுநிலைப் போட்டியில் இளவாலை ஹென்றியரசர் கல்லூரியுடன் மோதி ஆட்டம் 2:2 என சமநிலையில் முடிவடைந்தது. வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பதற்கான சமநிலை தவிர்ப்பு உதையில் ஹென்றியரசர் வெற்றிபெற்றது. தொடர்ந்து அரையிறுதியில் ஸ்கந்தவரோதயக் கல்லூரியை 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதியாட்டத்திற்கு சென்றது. இறுதியாட்டத்தில் மீண்டும் ஹென்றியரசர் கல்லூரியை சந்தித்து 2:0 என தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை பெற்றது.
20 வயது பெண்கள் அணி அரையிறுதியாட்டத்தில் கீரிமலை நகுலேஸவரா மகா வித்தியாலயத்தை சந்தித்தது. இரு அணிகளும் கோல்கள் பெறாதநிலையில் சமநிலைத்தவிர்ப்பு உதையில் மகாஜனா வெற்றிபெற்றது. இறுதிப்போட்டியில் பண்டத்தரிப்பு இந்து மகளிர் கல்லூரியை சந்தித்தது. இறுதியாட்டமும் 1:1 என சமநிலையில் முடிவடைய சமநிலை தவிர்ப்பு உதையில் மகாஜனா வென்று சாம்பியனாகியது.

Comments are closed.