(மார்ச் மாதம் 28ம் திகதி எழுபத்தைந்து வயதினைப் பூர்த்தி செய்யும் ‘கலாசூரி’ ஆ சிவநேசச்செல்வனை கௌரவித்து இக்கட்டுரை வெளிவருகிறது)
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் தென்மேற்கு மூலையில் அமைந்திருந்தது விவசாயியான சின்னக்குட்டி – சேதுப்பிள்ளை தம்பதிகளின் ஒரே மகளான தெய்வானைப்பிள்ளையின் வீடு. சைவத்திலும் தமிழிலும் அக்கறையும் அறிவும் கொண்ட மறவன்புலவு நா ஆறுமுகம் ஆசிரியர் தெய்வானைப்பிள்ளையின் துணைவராகி தெல்லிப்பழைக்கு குடிபுகுந்தார். இந்தத் தம்பதிகளின் மூத்த புதல்வன் சிவநேசச்செல்வன். தனது பாடசாலைக்காலம் முழுமையிலும் மகாஜனாவில் கற்றவர்.
மகாஜனாவில் ஒரு நிறைவான மாணவர். தமிழில் கவிதை கட்டுரைகளை மாணவப் பராயத்தில் ஆர்வத்துடன் எழுதியவர். கல்லூரியின் சஞ்சிகையான ‘மகாஜனனில்’ தனது எழுத்து ஆர்வத்தைத் தொடக்கியவர். சிறந்த உதைபந்தாட்ட வீரனாக யாழ்மாவட்டம் முழுவதும் அறியப்பட்டவர். இடதுகால் ஆட்டக்காரரான இவர், 1960 – 61 காலங்களில் மகாஜனக் கல்லூரி முதலாம் பிரிவு அணியின் இடதுகரை முன்னணி ஆட்டக்காரர். பிராமணர் போன்று வெள்ளை நிறம் கொண்ட இவரை மகாஜன விளையாடுகின்ற போட்டிகளில் மகாஜனா தவிர்ந்த ரசிகர்களால் ஐயர் என விளிக்கப்பட்டவர். இவர் விளையாடிய மகாஜனாவின் முதலாம் பிரிவு அணியினர் 1961இல் யாழ் மாவட்ட சாம்பியன் இறுதிப்போட்டியில் விளையாடினார்.
மகாஜனக் கல்லூரியிலிருந்து தெரிவாகி கலைத்துறைக்கு பேராதனைப் பல்கலைக் கழகம் சென்றார். அங்கே தமிழை சிறப்புப் பாடமாகக் கொண்டு ‘கலைமானி’ பட்டத்தைப் பெற்றார். பல்கலைக்கழக தமிழ்மாணவர் சஞ்சிகையான ‘இளங்கதிர்’ ஆசிரியராக இதழியல் துறையில் காலடி பதித்தவர். மகாஜனாவில் இவரின் ஆசிரியராக விழங்கிய ‘தமிழருவி’ த சண்முகசுந்தரம் அவர்களே ‘இளங்கதிர்’ சஞ்சிகையின் முதலாவது ஆசிரியர். பல்கலைக்கழகக் கல்வியின் பின்பாக, மகாஜனாவில் தற்காலிக ஆசிரியாக கல்விப் பணியை ஆரம்பித்தார். பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றியவர், யாழ் பல்கலைக்கழகத்தின் நூலகத்திலும் கடமையாற்றினார். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி நீண்ட இலக்கியப் பாரம்பரியம்கொண்ட பாடசாலை. அதற்கு நிகராக இலங்கையில் வேறெந்தப் பாடசாலையையும் சொல்ல முடியாது. இங்கேதான் சிவநேசச்செல்வனின் தமிழ், மொழியியல் ஆர்வமும் தொல்லியல்துறையில் ஆரம்பத் தேடல் முயற்சிகளும் தொடங்கின. இதழியலிலும் மொழியியலிலும் இவருக்கு ஆர்வத்தை உருவாக்கியவர்களில் மகாஜனாவில் இவரின் ஆசிரியர்களாகக் கடமையாற்றிய மா. மகாதேவன், தமிழருவி த சண்முகசுந்தரம் ஆகியோர் குறிப்பிடப்படவேண்டியவர்கள்.
மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் இணைச்செயலாளராக 1971 – 72 காலத்தில் கடமையாற்றினார். 1972இல் மகாஜன ஸ்தாபகர் பாவலர் துரையப்பாபிள்ளையின் நூற்றாண்டு விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வை நடாத்துவதற்கு உருவாக்கப்பட்ட ‘துரையப்பாபிள்ளை நூற்றாண்டு விழாச் சபை’யின் இணைச் செயலாளராக செயற்பட்டார். இவருடன் மற்றைய இணைச் செயலராக இருந்தவர் மயிலங்கூடலூர் நடராஜன் ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து மிகத் தரம்வாய்ந்த துரையப்பா நூற்றாண்டு மலரை வெளியிட்டார்கள். விழாவின் ஒரு பகுதியாக கல்லூரி முன்றலில் பாவலருக்கு முழு உருவச் சிலை அமைக்கப்பட்டது. விழாவை ஒட்டி இடம்பெற்ற கருத்தரங்கு, கவியரங்கு என்பன தரம் வாய்ந்ததாக மட்டுமல்லாமல் பிரயோசனமானதாகவும் அமைந்திருந்தது. கருத்தரங்கில் பேராசிரியர்கள் கைலாசபதி, வித்தியானந்தன், சிவத்தம்பி உட்படப் பலர் கலந்து கொண்டமை நினைவுக்கு வருகின்றது. கவியரங்கில் அன்றைய ஈழத்தின் சிறந்த கவிஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இதன்போது கலைப்பெருமன்றத்தின் முயற்சியினால் மகாஜனாவின் முன்னால் செல்லுகின்ற, தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து அம்பனைச் சந்திவரையான வீதிக்கு ‘பாவலர் துரையப்பாபிள்ளை வீதி’ எனப் பெயரிட்டு பெயர்ப்பலகையை கிராமசபைத் தலைவர் சட்டத்தரணி ம. சிதம்பரநாதன் அவர்கள் திறந்துவைத்தார். எமது வேண்டுகோளை ஏற்று தெல்லிப்பழைக் கிராமசபை பெயரிடும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
1988ம் ஆண்டு மகாஜனக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் மகாஜனக் கல்லூரியின் இலக்கியப் பாரம்பரியம் என்ற தலைப்பில் ஆற்றிய நிறுவியவர் நினைவுப் பேருரையில் ‘மகாஜனன்’ நா சண்முகலிங்கம் (பேராசிரியர்) பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘மயிலங்கூடலூர் நடராசனுடன் இணைந்தும் தனித்தும் மகாஜன இலக்கியப் பாரம்பரியம் என்ற எண்ணக்கரு அறிஞர் மட்டத்திலும் மக்கள் மத்தியிலும் நிலைநாட்டப்படவும் ஏற்றுக்கொள்ளப்படவும் பல்வேறு வழிகளில் உழைத்தவர்களில் திரு ஆ சிவநேசச்செல்வன் குறிப்பிடத்தக்கவர். கல்லூரியில் பாவலர் நூற்றாண்டு மலர், நிறுவியவர் நினைவுப் பேருரைத் தொடர் என இவர் சிந்தனையில் மலர்ந்தவை பல. தமிழிலக்கியம், தொல்லியல், தமிழில் தொடர்புச் சாதனங்கள் என்பனபற்றிச் சிறந்த கட்டுரைகளையும் இவர் தந்துள்ளார். மகாஜனப் பாரம்பரியத்தில் பாவலரிலிருந்து தொடருகின்ற பத்திரிகைத்துறை மரபில் இவர் இன்று வீரகேசரி இதழின் பிரதம ஆசிரியராக இருக்கின்றார்’.
இதேபோல மலையகத்திலிருந்து வந்து விடுதிச்சாலையில் தங்கி மகாஜனாவில் கல்விபயின்ற பேராசிரியர் சின்னத்தம்பியும் பேராசிரியர் சந்திசேகரனும் பலதடவைகள் எழுத்திலும் பேச்சிலும் சிவநேசச்செல்வன் வீட்டிலிருந்த நூல்களைப் பற்றியும் அவை எவ்வளவு தூரம் தங்களின் அறிவுத் தேடலுக்கு உதவியிருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இத்தகைய நூல்களையும் பத்திரிகைகளையும் அவர் வீட்டில் வாசித்து ‘அறிவைத் தேடிய’ வாய்ப்பு எனக்கும் கிடைத்தது, சிவநேசச்செல்வன் தான் தேடிய அறிவையும் அதற்குக் காரணமாகிய வாய்ப்புக்களையும் இன்னமும் பலருக்கு வழங்கியமை குறிப்பிடப்படவேண்டும்.
மா மகாதேவன் அவர்களுடன் இணைந்து கந்தரோடை புத்த கோவில் பற்றிய இவருடைய தேடல்களையும் ஆராய்ச்சிகளையும் எனது சிறுவயது ஞாபங்கள் சொல்லி நிற்கின்றன. இவருடைய வீடு மகாஜனக் கல்லூரியின் மேற்குப்புறத்திலும் எனது வீடு மகாஜனக் கல்லூரியின் கிழக்குப்புறத்திலும் இருந்தன. மகாஜனாவைச் சுற்றியுள்ள குறிச்சியை அம்பனை என அழைப்பர். இங்கே மொத்தமாக ஐம்பது குடும்பங்களே வசித்திருந்தன. இவருடைய வீடு, எனதும் சுற்றியுள்ள சிலரினதும் வாசிப்பு மையமாக இருந்தது. சிவநேசச்செல்வனின் கலை-இலக்கிய ஆர்வம் எம்மில் சிலரை இணைத்து ‘கலைப்பெருமன்றம்’ என ஒரு கலை – இலக்கிய அமைப்பை உருவாக்க வழிவகுத்தது. 1968ம் வருடம் திருக்கார்த்திகையன்று இவரின் வீட்டின் முன்னால் உள்ள அம்பனை ஞானவைரவர் ஆலயத்தில் ‘கலைப்பெருமன்றம்’ ஆரம்பிக்கப்பட்டது. சங்கீத வித்துவான் பொன் முத்துக்குமாரு தலைவராகவும் நானும் தற்பொழுது பிரான்ஸில் வதியும் சிவலிங்கமும் இணைச்செயலாளர்களாகவும் தற்பொழுது ஜெர்மனியில் வதியும் ‘ஏலையா’ முருகதாசன் பொருளாளராகவும் தெரியப்பட்டோம். எட்டு ஆண்டுகள் மட்டுமே செயற்பட்ட இந்த அமைப்பு என்னைப் பலவழிகளில் வளர்ப்பதற்கும் கலை-இலக்கிய ஆர்வத்தை உருவாக்குவதற்கும் காரணமாக இருந்தது. எம்மைச் சுற்றியுள்ள மக்களின் தொடர்பையும் ஆதரவினையும் எமக்குப் பெறுவதற்காக வைரவர் ஆலயத்தையும் அதனுடைய சமய நிகழ்வுகளையும் பாவிக்கின்ற வகையில் எமது செயற்பாடுகள் அமைந்நிருந்தன. வைரவர் ஆலயத்தில் வருடாவருடம் திருக்கார்த்திகையன்று தீபத் திருவிழாவையும் பத்துநாட்களும் அதிகாலையில் அபிஷேகம், சமயச்சொற்பொழிவு, பூசை என மிக விமரிசையாக மார்கழித் திருவெம்பாவைவையையும் நடாத்தினோம். இவைகள் கலைப்பெருமன்றத்தின் செயற்பாடுகளிற்கு அந்த மக்களின் ஆதரவைப் பெற்றுத்தந்தன. சங்கத்தில், நாடகக் குழு ஒன்று பொன் நாகரத்தினம் தலைமையில் உருவாக்கப்பட்டு, தங்கப்பதக்கங்கள் பல பெற்ற நாடகங்களை தாயாரித்தது. யாழ்மாவட்டத்தின் பல கிராமங்களில் உள்ள சமூக நிறுவனங்கள் தங்கள் விழாக்களிற்கு எம்மை அழைத்து இந்த நாடகங்களை மேடையேற்றறின.
இவற்றைவிட சங்கத்தால் நடாத்தப்பட்ட ‘உழவர் விழா’ மிகப் பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் அம்பனையையும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களையும் சேர்ந்த கலை-இலக்கிய வாதிகளில் தகுதியானவர்களில் ஒருவர் ஆண்டுதோறும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இந்த விழாக்களில் தகுதியான மலர்கள் வெளியிடப்பட்டன. இவற்றுள் ‘மஹாகவி’ உருத்திரமூர்த்தியின் திடீர் இழப்பினைத் தொடர்ந்து வெளியிட்ட ‘மஹாகவி நினைவுமலரும்’ இலக்கியமணி – குரும்பசிட்டி கனக. செந்திநாதனைக் கௌரவித்து வெளியிட்ட ‘மறுமலர்ச்சி மலரும்’ காத்திரமானவை. இவை இற்றைவரை பல ஆராய்ச்சிகளிற்கும் கட்டுரைகளிற்கும் பயன்படுத்தப்படுவதுடன் அவைகளின் குறிப்புகளுடனும் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. பின்னர் இதன் தலைவராக இருந்த சிவநேசச்செல்வனே இந்த முயற்சிகளின் பின்னால் இருந்தவர் என்பது ஆச்சரியமானதல்ல. அம்பனைச் சந்தியில் இவர் நடாத்திய ரியூற்ரறியில் பல இலக்கியக் கருத்தரங்குகளை ஒழுங்கு செய்திருந்தார். நான் இங்கிலாந்துக்கு வரவிருந்த வேளையில் (1975) மஹாகவி வீட்டிற்கு வந்திருந்த கவிஞர் எம் ஏ நுஃமான் (பேராசிரியர்) ‘புதுக்கவிதை’ பற்றி உரையாற்றியமை நினைவிலுள்ளது.
சிவநேசச்செல்வன் ‘ஈழத்துத் தமிழ் பத்திரிகைகள் ஓர் ஆய்வு’ என்ற நூலை 2000ஆண்டில் வெளியிட்டுள்ளார். அதில் பேராசிரியா கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் அணிந்துரையை எழுதியுள்ளளார். அதில் அவர் குறிப்பிடுகிறார் – ‘இம்முன்னுரையிலே சிவநேசச்செல்வனின் ஆழுமைப் பரிமாணம் பற்றி ஒரு குறிப்புத் தரப்படுத்தல் அவசியமானதாகும். இலங்கைப் பல்கலைக் கழகத்தினூடாகத் தமிழியல் கல்வியில் ஆழமான பரிச்சியமும், நூலக விஞ்ஞானத்துறையிலே வரன்முறைத் தொழில் முறையிலான முதுமானிப்பட்டப் பயிற்சியையும் மைசூர் பல்கலைக்கழகத்தில் இவர் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து வுரகேசரியில் பிரதம ஆசிரியராகவும் பின்னர் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் விளங்கியுள்ளார். இத்துறையிலே இவர் நன்கு தொழிற்படுவதற்கேற்ற முறைமையின் முன்பயில்வாக தனது இலங்கைப் பல்கலைக்கழக முதுமாணிப் பட்டத்திற்கென எழுதப்பட்ட ஆய்வாக இந்த நூல் அமைந்துள்ளது என்பதனை மிகுந்த திருப்தி உணர்வுடன் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்’.
சிவநேசச்செல்வனின் நூலிலே நண்பர் தெ மதுசூதனன் எழுதிய குறிப்பு முக்கியத்தவமானது. அவர் குறிப்பிடுகிறார் – கலாசூரி சிவநேசச்செல்வன். தமிழ் ஊடகவியல் துறையில் பன்முகப் பணிகளை மேற்கொண்டவர், குறிப்பாக வீரகேசரி, தினக்குரல் இதழ்களின் பிரதம ஆசிரியராகப் பலகாலம் இயங்கியவர்.
தமிழ் மரபு வழிக் கல்விப் பாரம்பரியம், மகாஜனக் கல்லூரிப் பாரம்பரியம், பேராதனைப் பல்கலைக் கழகக் கல்விப் பாரம்பரியம், முதலானவற்றின் புலமை ஊடாட்டங்களையும் செழுமைகளையும் வளங்களையும் தனதாக்கிக்கொண்டு தனக்கான ஆற்றல்களையும் திறன்களையும் வளர்த்துத் தமிழ்ச் சூழலில் பேர் சொல்லும் அளவிற்கு உயர்வு கண்டவர்.
பேராசிரியர்களான க கணபதிப்பிள்ளை, சு வித்தியானந்தன், கா இந்திரபாலா, ஆ வேலுப்பிள்ளை, க கைலாசபதி, கா சிவத்தம்பி, வி சிவசாமி, பொ பூலோகசிங்கம், சி தில்லைநாதன், மற்றும் பண்பாட்டாளர் கலையருவி த சண்முகசுந்தரம் முதலான புலமைப் பாரம்பரியங்களையும் அறிகை மரபுகளையும் கற்றுக்கொண்டு தமிழியல் சிந்தனைகளையும் ஆய்வுத் தேட்டங்களையும் நுணுக்கமாக உள்வாங்கிவந்தவர். வரலாற்று தொல்லியல் அறிவுத் தொகுதிகளையும் தெளிந்து நமக்கான மரபுப் பண்பாட்டை மீளகண்டுபிடிப்புச் செய்வதிலும் உழைத்தவர். கவிஞராக, கட்டுரையாளராக, ஆய்வாளராக, விரிவுரையாளராக எனப் பல களங்களில் இயங்கியவர். கலை இலக்கிய ஆர்வத்துடன் மட்டுமல்லாதுபண்பாட்டு நிறுவனங்கள் பலவற்றிலும் அங்கத்தவராக இருந்து செயற்பட்டவர். நூலகவியல் துறையிலும் பெரும் ஈடுபாடு காட்டியவர். ஆசி செல்வன் என்னும் புனைபெயரில் பல்வேறு இதழ்களிலும் ஆக்கங்களை வெளிக்கொணர்ந்தவர்.
ஈழத்து தமிழ் இதழியல் வரலாறு எழுதப்படும்பொழுது சிவநேசச்செல்வன் பெயரைத் தவிர்த்து எழுதமுடியாது. அந்தளவிற்கு இதழியல் பரப்பில் இயக்கம் கொண்டு மூத்த ஊடகவியலாளர் என்ற தகுதிக்கு உரித்தானவராகவும் உள்ளார்’.
தந்தையார் ஆசிரியர் நா ஆறுமுகத்தின் அடிச்சுவட்டில் தமிழ்த்தேசியத்தின் பின்னணியைக் கொண்டவராக இருந்தார். ஆனாலும் காங்கேசன்துறைத் தொகுதியில் 1970 பொதுத் தேர்தலிலும் 1975 இடைத்தேர்தலிலும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வி பொன்னம்பலத்தை ஆதரித்தவர். முற்போக்கு சிந்தனையின் இயங்கு விசைகளாக இருந்த பேராசியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, தில்லைநாதன் போன்றோருடனான நெருக்கம் தந்த இடதுசாரிச் சிந்தனைக்கும் குடும்ப வழிவந்த தமிழ் தேசியவாத சிந்தனைக்கும் இடையில் சிக்கித்திணறிய அரசியலைக் கொண்டவராகவே இருந்து வந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.
சிவநேசச்செல்வன் இலங்கையின் இரண்டு பெரும் நாளிதழ்களின் ஆசிரியராக செயற்பட்டவர். இவருடைய ஆசிரிய காலம் முழுவதும் பிரச்சினைகளும் போரும் பயங்கரவாதமும் இணைந்து அனைவரையும் வருத்தியெடுத்த காலம். பிரச்சினைகளின் இரண்டு பக்கங்களான அரசாங்கம், இயக்கங்கள் என்பனவற்றின் அராஜகங்களுக்கு முகம் கொடுத்தவர். இவர்களுடைய நெருக்குவாரத்திற்கு மத்தியில் சிவநேசச்செல்வனின் இதழியல் பணிகள் ஆய்வு செய்யப்படவேண்டியவை. ஆனாலும் இதழியல் அனுபவங்களும் அவரின் ஏனைய கட்டுரைகளும் நூலுருப்பெற வேண்டும். இதையே ஒரு வேண்டுகோளாக இவரிடம் வைக்க விரும்புகின்றேன்.
எழுபத்தைந்து வயது கண்டுள்ள அண்ணர் சிவநேசச்செல்வனுடன் பழகிய எனது இழமைக்காலம் பயனுடையது. என்னையும் வளர்க்க உதவியது. என்னுடைய வாழ்த்துக்கள்.
நாகலிங்கம் சிறிகெங்காதரன்
28 மார்ச் 2017