­


மாணவர்களை அடிப்பது வன்முறையாகும்

மாணவர்களை அடிப்பது வன்முறையாகும்
வன்முறை வடுக்களை உருவாக்கும்
வடுக்கள் மனப்பிறழ்வுகளை ஏற்படுத்தும்

நாம் மாணவர்களாக இருக்கும் பொழுது ஆசிரியர்கள் மட்டுமல்ல பெற்றோர்கள் நம்மை அடிப்பதையும் விரும்புவதில்லை. அவர்கள் நல்ல நோக்கத்திற்காகவே அடிக்கின்றார்கள் என நியாயப்படுத்தியபோதும் அது ஒரு தவறான செயற்பாடே. ஏனெனில் அடிப்பது என்பது வன்முறை. வன்முறை மாணவர்களாகிய குழந்தைகளிடம் மாறா வடுக்களை உருவாக்கும். வடுக்கள் மனப்பிறழ்வான நடத்தைகளை ஏற்படுத்தும். இந்த வடுக்களை நாம் கண்களினுடாக பார்க்க முடியாது. ஆனால் வடுக்கள் உருவாக்கும்  நடத்தைக் கோலங்களைப் பார்க்கலாம். தூரதிர்ஸ்டமாக இவற்றைப் புரிய முடியாது இருக்கின்றோம். மேலும் அடிப்பது என்பது அதிகாரத்துடன் தொடர்புடையது. இவ்வாறு பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் அதிகாரம் செயற்படும் பொழுது குழந்தைகள் மாணவர்கள் தமது சுயத்தையும் ஆற்றல்களையும் இழக்கின்றனர். மேலும் பயத்தினால் மெளனிகளாவதுடன் வெறுமனே மந்தைகளைப் போல பின்பற்றுகின்றவர்களாக மாறி வளர ஆரம்பிக்கின்றார்கள். இதனையே இவர்களும் வளர்ந்தபின் புதியதலைமுறையினருக்கு செய்கின்றனர். இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியல்ல.

images (4)எச்.ஹஸ்னா அவர்கள் சித்திரை 9ம் திகதி தினக்குரல் ஞாயிறு மலரில் எழுதிய “ஆசிரியர் மாணவர் உறவில் தண்டிப்பது குற்றமா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்த விடயம் தொடர்பாக எழுதியமை வரவேற்க தக்கது. ஆனால் இக் கட்டுரை மாணவர்களுக்கு அடிப்பதையும் தண்டனை வழங்குவதையும் நியாயப்படுத்தி ஆசிரியர்கள் சார்பாக பொதுவாக எழுதப்பட்டுள்ளது எனலாம். மேலும் தண்டனையே நல்ல குடிமக்களை உருவாக்கும் எனவும் முடிவு செய்கின்றார். (அவர் குடிமகன் என ஆண்மைய சொல்லையே பயன்படுத்தியிருந்தார்). இவற்றுடன் உடன்பட முடியாமையினால் பதில் கட்டுரை எழுத ஊந்தப்பட்டேன். இது மேம்போக்காக உரையாடக்கூடிய ஒரு விடயமல்ல. இதில் நமது கல்வித்துறை, கற்பிக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்களும் அவர்களது பொருளாதராமும் மாணவர்களும் அவர்களது ஆற்றல்களும் விருப்பங்களும் மற்றும் சமூக கட்டுப்பாடுகளும் எதிர்பார்ப்புகளும் எனப் பல தளங்களில் கோணங்களில் உரையாடப்பட வேண்டிய ஒன்று. இதை ஆய்வாளர்களுக்கு விட்டுவிட்டு எனது நிலைப்பாட்டை வாசகர்கள் முன்வைக்கின்றேன். மேலும் அடிப்பது ஏன் தவறு என்பது தொடர்பாக வேறு ஒரு கட்டுரையையும் விரைவில் எழுத முயற்சிக்கின்றேன்.

download (4)கல்வி என்பது உலகில் காணப்படுகின்ற பல விடயங்களை அறிதலும் நமக்கு ஆர்வமான ஆற்றலுள்ள துறையில் கற்றலும் எனலாம். ஆனால் நமது நாட்டில் கல்வி என்பது தொழில் ஒன்றைப் பெறுவதற்கான வழியாகவும் அதற்காக பரிட்சையில் சித்தியடைதல் என்பதாகவுமே குறுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் பரிட்சை மட்டுமே ஒருவரின் ஆற்றலை மதிப்பிடுவதற்கான வழிமுறை என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தூரதிர்ஸ்டமாக இந்த வழிமுறை அனைவருக்கும் பொருத்தமானதல்ல. சிலர் பரிட்சைகளில் நன்றாகச் செய்யாமல் நடைமுறை பரிசோதனைகளில், வாய் வழியில் அல்லது வேறு வழிகளில் மிக இலகுவாகவும் வெற்றிகரமாகவும் செய்வார்கள். ஆகவே மாணவர்களின் ஆற்றல்களை அளவிடவும் மதிப்பிடவும் வேறு வேறு உத்திகளையும் கையாள வேண்டும். ஆனால் நமது கல்வித்துறையில் பரிட்சை மட்டுமே பொதுவான உத்தியாக இருக்கின்றது. இதனை நோக்கியே அனைத்து மாணவர்களையும் கல்வித்துறை, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றும் சமூகம் என அனைவரும் நிர்ப்பந்திக்கின்றனர். இது பாரிய மன அழுத்தத்தை மாணவர்கள் குழந்தைகள் மீது விதைக்கின்றது. மேலும் இதில் சித்தி பெற முடியாதவர்கள் ஆற்றலற்றவர்கள் திறமையற்றவர்கள் எனப் புறக்கணிக்கப்படுகின்றனர். இவர்களுக்கே அடி அதிகமாகவும் விழுகின்றது. இது சிலரின் வாழ்க்கை சீரழிவதற்கும் காரணமாகிவிடுகின்றது. மிகச் சிலரே தன்னம்பிக்கையுடன் இதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி கொள்கின்றனர். உண்மையில் கல்வித்துறை என்பது மாணவர்களின் ஆற்றல்களை கண்டறிந்து அந்த ஆற்றலை மேலும் வளர்த்துச் செல்வதற்கு வழிகாட்ட வேண்டும். ஆகவே முதல் மாற்றம் அல்லது சீர்திருத்தம் நமது கல்வி முறைமையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான முன்நிபந்தனைகளில் ஒன்று ஆற்றலுள்ள சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதாகும்.

download (3)ஆசிரியர் பணி என்பது எப்பொழுதும் மகாத்தான சேவையே. இதனை வெறுமனே ஒரு தொழிலாகக் குறுக்கக் கூடாது. இதை இவர்கள் திறம்பட செய்வதற்கு சரியான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் நமது நாட்டில் பெரும்பாலும் சாதாரண தர, உயர் தர மற்றும் முதல் பட்டப்படிப்புடன் ஒருவர் ஆசிரியர் வேலையை எடுக்கலாம். அல்லது ஆசிரியர் நியமனப் பரிட்சையில் சித்தியடைந்து வேலையைப் பெற்றுக்கொள்ளலாம். ஆசிரியர் பயிற்சிகள் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படுகின்றன. இருப்பினும் இந்த ஆசிரியர்கள் மாணவர்களின் ஆற்றல்களை கண்டறியவும் அவர்களை சரியான வழியில் வழிநாடத்தவும் பயிற்றுவிக்கப்படுகின்றார்களா என்றால் அது கேள்விக்குறியே. ஆகவே முதலில் ஒவ்வொரு ஆசிரியர்களும் கற்பிக்கும் துறையில் ஒரு பட்டத்தைப் பெற்றிருப்பதுடன் ஆசிரியரியம் தொடர்பான ஒரு பட்டத்தையும் பெறவேண்டும்.. இதனுடாக மாணவர்களை எவ்வாறு புரிந்து கொள்வது வழிநாடாத்துவது கற்பிப்பது என்பதை உளவியல் அடிப்படையிலும் இவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். இவர்களையே அனைத்து மாணவர்களுக்கும் (பாலர் வகுப்பு முதல் உயர்தரம்வரை) ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு தாம் கற்பிக்கும் குறிப்பிட்ட துறையில் ஆழமான அறிவிருக்க இருக்கவேண்டும். இந்த அறிவானது இவர்களுக்கு அதிகாரத்தை வழங்க கூடாது. மாறாக தமது அறிவைப் பகிர்ந்து கொள்கின்றோம் என்ற அடிப்படைப் பண்பையே வழங்க வேண்டும். ஏனெனில் மாணவர்கள் தாம் அறியாத விடயங்களை அறிவதற்கே கல்வி கற்க வருகின்றார்கள்.
download (2)மாணவர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு வகையான ஆற்றலுள்ளவர்கள். இவர்கள் இந்த ஆற்றல்களை வெளிப்படுத்தும் வழிமுறைகளும் வேறுபடும். ஆகவே இவற்றை வெளிக்கொண்டுவர பொருத்தமான திறந்த சூழலும் ஆற்றலுள்ள ஆசிரியர்களின் வழிகாட்டலும் பெற்றோர்களின் ஆதரவும் இருக்க வேண்டும். ஆனால் நமது கல்வி முறையில் குறிப்பிட்ட சில விடயங்கள் துறைகள் மட்டுமே திணிக்கவும் கற்பிக்கவும் படுகின்றன. மேலும் பரிட்சையில் சித்தியடைதல் மட்டுமே மாணவர்களின் ஆற்றலை அறிவை அறிவதற்கான ஒரு வழிமுறையாக காணப்படுகின்றது. ஆகவே ஆசிரியர்களும் எவ்வாறு பரிட்சையில் சித்தியடைவது என்பதை மட்டுமே கற்பிக்கின்றனர். மேலும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் குறைவான ஊதியம் அவர்களை மாலைநேர வகுப்பில் கற்பிப்பதற்கு தள்ளுகின்றது. ஆகவே பல ஆசிரியர்கள் பாடசாலைகளில் கற்பிக்காமல் தமது மாலை நேர வகுப்புகளிலையே கற்பிக்கின்றனர். மாணவர்கள் இவ்வாறு மேலதிக மாலை நேர வகுப்புகளுக்கு செல்வதால் பாடசாலையிலும் ஆசிரியர்கள் அக்கறையில்லாமல் கற்பிக்கின்றார்கள். இது ஒரு பொதுவான போக்காகவே இருக்கின்றது. விதிவிலக்குகள் இருக்கலாம். கற்பித்தல் என்பது ஒரு கலை. அதை ஆசிரியர் தொழிலாக குறுக்கும் பொழுது அதன் தரம் தாழ்ந்து போகின்றது.
images (6)மேலும் பரிட்சைகளில் உருவாக்கப்படுகின்ற போட்டி மனப்பான்மை மாணவர்களையும் மாலைநேர வகுப்பை நோக்கித் தள்ளுகின்றது. ஆகவே மாணவர்கள் பரிட்சையில் சித்தியடைய கற்பது மட்டுமே தமது வேலை என உணரத் தலைப்படுகின்றனர். இதனால் தம்மிடமிருக்கின்ற பல்வேறு ஆற்றல்களை கவனிக்கவும் வளர்க்கவும் தவறுகின்றனர். இது மாணவர்கள் மீது அதிக சுமைகளை சுமத்துவதுடன் இயந்தி மனிதர்களாக உருவாக்கின்றது. இவ்வாறு மாணவர்கள் குழந்தைகள் மீது சுமைகளை திணிக்கின்ற கல்வி முறைமைகளில் மாற்றங்களை உருவாக்க வேண்டும். மேலும் மாணவர்களின் குழந்தைகளின் ஆற்றல்களை அறிவதற்கான பல வழிமுறைகளைக் கண்டுபிடித்து வளர்க்க வேண்டும். இதுவே சிறந்த ஆசிரியர்களை மட்டுமல்ல மாணவர்களையும் உருவாக்கும்.
கல்வித்துறை தொடர்பான சமூகத்தின் பொதுப் போக்கையும் கேள்விற்குட்படுத்த வேண்டும். பொதுவாக கல்வி என்பது அறிவைப் பெறுவதற்கான ஒன்றாக இல்லாமல் தொழில் வாய்ப்பை பெறுவதற்கான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. ஆகவே சமூகத்தில் அந்தஸ்தும் உயர் வருமானமும் கிடைக்கின்ற தொழில்துறையை நோக்கியே தமது குழந்தைகளையும் மாணவர்களையும் அனைவரும் தள்ளுகின்றனர். அரசும் சமூகமும் தொழித்துறையில் காணப்படுகின்ற பாராபட்சங்களையும் நியாயமின்மைகளையும் கணக்கில் எடுப்பதில்லை. இது மாணவர்களுக்கே கஸ்டத்தை வழங்குகின்றது. மேலும் சமூகம் குழந்தைகளின் மாணவர்களின் நோக்கு நிலையிலிருந்து பார்ப்பதில்லை. தமது நோக்கு நிலையிலிருந்தே பார்க்கின்றனர். இவ்வாறான முரண்பட்ட நிலைமைகளினால்தான் ஆசிரியர்கள் தமது எதிர்பார்ப்பை நிறைவேற்ற மாணர்வகள் மீது வன்முறை பிரயோகிக்க வேண்டி ஏற்படுகின்றது. இது ஒருவகையான அதிகாரப்போக்கு என்பதுடன் மாணவர்களின் இயல்பான ஆற்றல்கைள காயடிக்கின்றது. இதற்கு மாறாக கல்வித்துறையில் காணப்படுகின்ற மூலப் பிரச்சனையை தீர்ப்போமாயின் பல விடயங்கள் இலகுவாகிவிடும். இவ்வாறான ஒரு விவாதமே அவசியமற்றதாகிவிடும். ஆனால் இதனை யார் செய்வது?
மாணவர்கள் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் ஆர்வமாகவும் கல்வி கற்பதற்கு குடும்பங்களின் பொருளாதார நிலை நல்ல நிலையில் இருப்பது முக்கியமானது. ஆனால் நமது சமூகங்கள் ஏற்றத்தாழ்வான சுரண்டி வாழ்கின்ற சமூகம். சிலர் மட்டுமே நல்ல பொருளாதார நிலையில் வாழ பலர் மோசமான பொருளாதார நிலையில் வாழ்கின்றனர். ஒரு சில மாணவர்களும் குடும்பங்களுமே தமது பொருளாதார நிலையைக் கடந்தும் கல்வியில் ஊன்றி நிற்கின்றார்கள். ஆனால் இவ்வாறு அனைவராலும் நிற்க முடிவதில்லை. மேலும் நமது சமூகங்கள் போர் சுழலுக்குள் வாழ்ந்து வந்த சமூகம். அதன் பாதிப்புகளும் பெற்றோர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களில் ஆழமான வடுக்களை உருவாக்கியுள்ளன. இவ்வாறான சூழலில் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த பெற்றோர்களும் மாணவர்களும் கல்வியில் அக்கறையில்லை என மேம்போக்காக் கூறிச்செல்ல முடியாது. அவர்கள் அவ்வாறு இருப்பதற்கு பல பொருளாதார, சமூக, அரசியல் காரணிகள் இருக்கின்றன. இவற்றை நிவர்த்தி செய்யாது மாணவர்கள் கற்கின்றார்கள் இல்லை என தண்டனை வழங்கி கல்வி கற்க நிர்ப்பந்திப்பதே மாபெரும் குற்றமாகும்.
இறுதியாக தான் கற்றதை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர்கள் தம்மிடம் இருக்கின்ற அறிவை ஒரு அதிகாரமாகப் பயன்படுத்தக்கூடாது. மேலும் இந்த அறிவை மாணவர்களிடம் பகிர்வதற்கு வன்முறையை ஒரு வழியாக கையாளக்கூடாது. இதற்கு மாறாக சமூகம், மாணவர்கள், அவர்களது ஆற்றல்கள் என்பன தொடர்பான விரிவான ஆழமான பார்வைகளைக் கொண்டவர்களாக, பொறுமையும் சேவை மனப்பான்மையும் கொண்ட, தன்னடக்கம் உள்ளவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். இவ்வாறு எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம் தான். இலட்சியபூர்வமானதுதான். ஆனால் அவசியமான ஒன்று. அப்பொழுதுதான் மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் மரியாதை இருக்கும். பயம் இருக்காது. ஆசிரியர்களுடன் விவாதிக்கும் ஆற்றலும் கேள்வி கேட்கும் தைரியமும் இருக்கும். இவ்வாறன சூழல் சிறந்த மாணவர்களை மட்டும் உருவாக்காது. சிறந்த மேம்பட்ட சமூகத்தையே உருவாக்கும்.

மீராபாரதி

நன்றி தினக்குரல் 11.06.2017

 

Comments are closed.