அஞ்சலி

எங்கு சென்றாய் தோழி நித்தியகலா?

நேற்று இடி போல வந்தது உன் செய்தி
இன்னமும் அதனை நம்ப முடியாது தவிக்கின்றோம்.
உன் கலகலப்பான பேச்சினை கேட்டு எனி எப்படி மகிழ்வது. வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை கதை கதையாய் கூறுவாய்.
உன் குழந்தைகள் இருவரையும் தவிக்க விட்டு எப்படி போக நினைத்தாய்?
சிறுவயது தொடக்கம் மகாஜனாக்கல்லூரியில் ஒன்றாகப் படித்தது, நான் உன்னுடன் சேர்ந்து நான்காம் வகுப்பில் ஏகலைவன் நாடகம் நடித்தது, எல்லாமே என் நினைவில் இன்னமும் பசுமையாக உள்ளது.
இத்தனை வருடங்களின் பின்னரும் நாடகத்தில் நடித்த அப்படத்தினை பாதுகாத்து சில மாதங்களின் முன் அனுப்பி வைத்தாய். நட்பு என்பதற்கு அர்த்தம் கூறுவாய். நட்பை விடப் பெரியது வேறு எதுவுமே இல்லை என்று கூறுவாய். எவ்வளவு சந்தோசமாக இருந்தோம். வேலைக்கு போய் வரும் போது எத்தனை விடயங்களை பேசியிருப்போம். கடைசியாக போனகிழமை கூட எமது சந்திப்பு பற்றி எத்தனை திட்டங்கள் தீட்டினோம். எல்லாமே பொய்யாகி விட்டது. உன்னை எனி நான் எப்போது பார்ப்பது?

உன்னை எனி சந்திக்க மாட்டேன் என்று நினைக்கும் போது நெஞ்சு வெடிக்கிறது. நீங்காத துயரத்தில் எம்மை ஆழ்த்தி விட்டாய். இந்த வருடம் உன் பள்ளித் தோழிகள் சிலரை சென்று சந்தித்தாய். எல்லா நண்பர்களுடனும் ஒரு சில மாதங்களுக்குள் கதைத்தாய். இப்படி எம்மை தவிக்க விட்டு செல்வதற்காகவா? எங்களால் உன் பிரிவினை தாங்கிக் கொள்ள இயலவில்லை. உனக்காக கண்ணீர் வடிக்கின்றோம். இழந்தவர் திரும்ப வரமாட்டார் என்பது தெரிந்திருந்தும,; இது பொய்யாக இருக்க கூடாதா எனக் கேட்கின்றோம். நித்தியகலா உனது கம்பீரமான பேச்சும், எல்லோருக்கும் உதவி செய்யும் தன்மையும், உண்;மையான நட்பும் உன் நினைவுகளை எங்கள் இதயத்தில் நிலைத்து வைத்திருக்கும். யூலை 29ம் திகதி இன்னமும் அதிக தூரத்தில் இல்லை. எத்தனை எதிர்பார்ப்புகளுடன் நண்பர்கள் நாமெல்லாம் காத்திருந்தோம். நீ கல்லூரிக்கு வருவதாக வாக்களித்தாய். இன்று கண் காணாத உலகத்திற்கே சென்று விட்டாய். ஏனிந்த அவசரம் உனக்கு? உனக்காக ஒரு வாழ்க்கை காத்திருப்பதாக போனகிழமை தான் கூறினாய்? எங்களுக்கு காலை வணக்கம் தெரிவிக்கும் நீ சொல்லாமல் கொள்ளாமல் எங்கு சென்று மறைந்தாய்? உனது கணவருக்கும், குழந்தைகளுக்கும், சகோதரர்களும் எங்கள் அனைவரின் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் இனிய தோழியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி!

 Ananthy Balasoorian

Comments are closed.